குடியரசு தின விழாவில் கவர்னர் கைலாஷ் நாதன் தேசிய கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணக்கோலம் பூண்டியிருந்தது.
காந்தி திடலின் கீழ் கொடிக்கம்பத்துடன் விழா மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தேசியக்கொடி ஏற்றினார். பின், கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கம், மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம், கவர்னரின் பதக்கம் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவினர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள், சாரணர், சமுதாய நலப்பணித்திட்டம் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
இதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்துறை, கால்நடை பராமரிப்பு, குடிமைப்பொருள் வழங்கல், தீயணைப்பு, சுகாதாரம், தொழில், உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி, சமூகநலம் ஆகிய துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments